தேவாலயப் பிரதிஷ்டை ஆராதனை முறைமை
ஆயத்தம்
சபையார் குருக்களோடும் பேராயரோடும்
ஆலயத்தின் முன் வாசலண்டை நிற்பர்.
குரு : பிரியமானவர்களே,
இந்த தேவாலயத்தையும், அதிலுள்ள யாவற்றையும் பரிசுத்தப்படுத்திப் பிரதிஷ்டை செய்ய இங்கே
கூடி வந்திருக்கிறோம். இப்பொழுது கர்த்தருக்குள்
சங்கை பொருந்திய நம்முடைய தகப்பனும், இத்திருமண்டல பேராயருமாகிய மகாகனம் ........................................ பேராயர் அவர்களை வரவேற்று அவர்களுக்கு
அளிக்கப்பட்டிருக்கிற அதிகாரத்தால் இவைகளெல்லாவற்றையும் பிரதிஷ்டை செய்ய உங்கள் பேராலே
கேட்டுக் கொள்கிறேன்.
குரு : கர்த்தர்
உங்களோடிருப்பாராக.
சபை : அவர்
உமது ஆவியோடும் இருப்பாராக
குரு : ஜெபம்
பண்ணக்கடவோம்.
யாவரும் : பரமண்டலங்களிலிருக்கிற
எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக; உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய
சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக. அன்றன்றுள்ள
எங்கள் அப்பத்தை எங்களுக்கு இன்று தாரும். எங்களுக்கு விரோதமாய் குற்றஞ்செய்கிறவர்களுக்கு
நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்கள் குற்றங்களை எங்களுக்கு மன்னியும். எங்களைச் சோதனைக்குள்
பிரவேசிக்கப்பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும், ராஜ்யமும், வல்லமையும்,
மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே, ஆமென்.
சுருக்க ஜெபம்
குரு : ஆண்டவரே, எங்கள் எல்லா செயல்களிலும் தேவரீர்
மிகவும் இரக்கமாய் எங்கள் முன்சென்று, எல்லா முயற்சிகளும், உம்மில் ஆரம்பித்து முன்னேறி
நிறைவேறவும், நாங்கள் உமது பரிசுத்த நாமத்தை மகிமைப்படுத்தி, முடிவிலே உமது கிருபையால்
நித்திய ஜீவனை அடையவும் அருள்புரிவீராக. கர்த்தராகிய
இயேசு கிறிஸ்துவின் மூலம் வேண்டிக்கொள்கிறோம்.
ஆமென்.
எல்லோரும் ஒரு கீதம்
பாடிக்கொண்டே ஆலயத்தை வலம் வருவர். பவனி முடிந்ததும்
பேராயர் ஆலயத்தின் முன் வாசலண்டை செல்வார்.
சேகர (சபை) குழுவினால்
நியமிக்கப்பட்டவர் உரிமைப் பத்திரம் வாசித்து ஆலயத் திறவுகோலை பேராயரிடம் கீழ்வரும்
வார்த்தைகளைச் சொல்லிக் கொடுப்பார்.
கடவுளுக்குள் சங்கை பொருந்திய தகப்பனே, இந்த ஆலயக் கட்டிடமானது
கடவுள் நாம மகிமைக்காகவும், தென் இந்தியத் திருச்சபையின் ஆராதனைக்காகவும் கட்டப்பட்டிருக்கிறது. இதற்கு அத்தாட்சியாக சேகரத்தின் (சபையின்) சார்பாக
இந்த உரிமைப் பத்திரத்தையும் திறவுகோலையும் தங்களிடம் சமர்ப்பிக்கிறேன். தாங்கள் இவ்வாலயத்தை திறந்து சர்வ வல்ல கடவுளை ஆராதிப்பதற்கென்று
பிரதிஷ்டை செய்யக் கேட்டுக் கொள்கிறேன்.
பேராயர் திறவுகோலை ஏற்றுக்கொண்டு பின்வருமாறு கூறுவார்:
கர்த்தருக்குள்
அருமையானவர்களே, இந்த ஆலயத்தைக் கடவுள் நாம மகிமைக்காக கட்டும் எண்ணத்தை அவர் தமது
ஜனத்தின் இருதயத்தில் எழுப்பினதற்காக மகிழ்ச்சி அடைகிறோம். எமக்கு ஒப்புவிக்கப்பட்டிருக்கும் பொறுப்புக்கு
அடையாளமாக இந்தத் திறவுகோலை தென் இந்தியத் திருச்சபை சார்பாக ஏற்றுக்கொள்கிறோம்.
உட்புகுதல்
பேராயர் : யார் கர்த்தருடைய பர்வதத்தில் ஏறுவான்? யார் அவருடைய பரிசுத்த ஸ்தலத்தில்
நிலைத்திருப்பான்?
சபை : கைகளில் சுத்தமுள்ளவனும், இருதயத்தில் மாசில்லாதவனுமாயிருந்து, தன்
ஆத்துமாவை மாயைக்கு ஒப்புக்கொடாமலும் கபடாய் ஆணையிடாமலும் இருக்கிறவனே.
பேராயர் : வாசல்களே, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்:
அநாதி கதவுகளே,
உயருங்கள்; மகிமையின் ராஜா உட்பிரவேசிப்பார்.
சபை : யார் இந்த மகிமையின் ராஜா?
பேராயர் : அவர் சேனைகளின் கர்த்தரானவர்.
அவரே மகிமையின் ராஜா. (சங்.24:3,4,9,10)
பேராயர் கீழ்வரும் வார்த்தைகளைச் சொல்லி கதவைத் திறப்பார்.
கிறிஸ்து
திரும்ப வருமளவும் அவரது அன்புக்கு அடையாளமாகவும், அவரது மீட்பின் செயலுக்கு சாட்சியாகவும்,
சபையார் ஆண்டவரைத் துதித்து மகிமைப்படுத்த உதவியாகவும் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின்
நாமத்திலே இந்த தேவாலயத்தை திறந்து வைக்கிறோம்.
சபையார் ஒரு
கீதம் பாடிக்கொண்டே உட்புகுவர். யாவரும் உட்புகுந்தபின்பு
பின்வரும் சங்கீதம் பாட அல்லது சொல்லப்படும்.
சங்கீதம்
122
கர்த்தருடைய ஆலயத்திற்குப்
போவோம் வாருங்கள் என்று எனக்கு அவர்கள் சொன்னபோது மகிழ்ச்சியாயிருந்தேன்.
எருசலேமே, உன் வாசல்களில் எங்கள் கால்கள்
நிற்கலாயிற்று.
எருசலேம் இசைவிணைப்பான நகரமாய்க்
கட்டப்பட்டிருக்கிறது.
அங்கே இஸ்ரவேலுக்குச் சாட்சியாகக் கர்த்தருடைய ஜனங்களாகிய
கோத்திரங்கள் கர்த்தரின் நாமத்தை ஸ்தோத்திரிப்பதற்குப் போகும்.
அங்கே தாவீதின் வம்சத்தாருடைய சிங்காசனங்களாகிய
நியாயாசனங்கள் வைக்கப்பட்டிருக்கிறது.
எருசலேமின் சமாதானத்துக்காக வேண்டிக்கொள்ளுங்கள்;
உன்னை நேசிக்கிறவர்கள் சுகித்திருப்பார்களாக.
உன் அலங்கத்திற்குள்ளே சமாதானமும்,
உன் அரமனைகளுக்குள்ளே சுகமும் இருப்பதாக.
என் சகோதரர் நிமித்தமும் என் சிநேகிதர்
நிமித்தமும், உன்னில் சமாதானம் இருப்பதாக என்பேன்.
எங்கள் தேவனாகிய கர்த்தரின் ஆலயத்தினிமித்தம்
உனக்கு நன்மையுண்டாகத் தேடுவேன்.
பிதாவுக்கும், குமாரனுக்கும் பரிசுத்த
ஆவிக்கும் மகிமையுண்டாவதாக.
ஆதியிலும் இப்பொழுதும் எப்பொழுதுமான சதாகாலங்களிலும்
மகிமை உண்டாவதாக ஆமென்.
ஆலயக்
கட்டடப் பிரதிஷ்டை
நின்றபடியே நாம் கர்த்தரைத்
துதிப்போமாக
குரு : பிதா, குமாரன், பரிசுத்த ஆவி எனும் மகா மகிமை பொருந்திய கடவுள் தம்மை
உலகத்தில் வெளிப்படுத்தியிருப்பதற்காகவும, அவருடைய ஆலயமாகிய திருச்சபைக்காகவும் எல்லா
தேசத்தாருக்கும் சுவிசேஷம் பிரசங்கிக்கப்படுவதற்காகவும் அவரைத் துதிப்போமாக.
சபை : கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக
குரு : இந்த தேசத்திலும், இந்த இடத்திலும் நற்செய்தியைக் கொண்டு வந்த எல்லா
மிஷனெரிகளுக்காகவும், நற்செய்தியாளர்கள், போதகர்களுக்காகவும் இந்த இடத்தில் தமக்குச்
சொந்தமாகச் சேர்க்கப்பட்டிருக்கும் ஜனத்துக்காகவும் கடவுளைத் துதிப்போமாக.
சபை : கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக
குரு : இந்த ஆலயத்தைக் கட்டுவதற்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்திலே தங்கள்
திறமை, வேலை, பணம் ஆகியவற்றைக் கொடுத்த எல்லாருக்காகவும் கடவுளைத் துதிப்போமாக.
சபை : கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக
நாம் நமது விண்ணப்பங்களை ஏறெடுப்போமாக
குரு : இத்தேசத்திலும், மாவட்டத்திலும், கிராமத்திலும் உள்ள கடவுளுடைய வீட்டார்
அனைவரையும் கடவுள் ஆசீர்வதிக்க அவரை வேண்டிக்கொள்வோமாக.
சபை : உம்மை வேண்டிக்கொள்கிறோம் கர்த்தாவே
குரு : இந்த தேவாலயத்தை கடவுளுடைய மகிமைக்கென்று பரிசுத்தமாக்க ஜெபிப்போமாக.
சபை : உம்மை வேண்டிக்கொள்கிறோம் கர்த்தாவே
குரு : விசுவாசிகளின் ஜெபத்தாலும், முயற்சியாலும் கடவுளை அறியாத ஜனங்களும்
இங்கு வந்து அவரை ஆராதிக்கவும், இந்த இடம் சகல ஜனங்களுக்கும் ஜெப வீடாகவும் ஜெபிப்போமாக.
சபை : உம்மை வேண்டிக்கொள்கிறோம் கர்த்தாவே
பேராயர் இப்பொழுது திருமேஜையின் முன் நின்று சொல்வார்
குரு : கர்த்தர் உங்களோடு இருப்பாராக.
சபை : அவர் உமது ஆவியோடும் இருப்பாராக.
குரு :
நித்திய
கடவுளே, வானாதி வானங்களும் உம்மைக் கொள்ளக்கூடாதே! கைகளால் கட்டப்பட்ட இந்த ஆலயம் எம்மாத்திரம்;
என்றாலும் இரண்டு பேராவது மூன்று பேராவது உமது திருநாமத்தில் கூடியிருக்கும் இடத்தில்
உமது அருள் பிரசன்னத்தை வாக்கருளியிருக்கிறீரே! இப்பொழுதும் பிதா குமாரன் பரிசுத்த
ஆவியின் நாமத்திலே (இச்சமயத்தில் பேராயர் + சிலுவை அடையாளமிடலாம்) நாங்க்ள பக்திவிநயமாய்த்
தமக்குப் பிரதிஷ்டை செய்கிற இந்த ஆலயத்தைப் பரிசுத்தப்படுத்தியருள வேண்டுமென்று பணிவுடன்
உம்மை வேண்டிக்கொள்கிறோம்.
நாங்கள்
இதை உமது வீடாகவும் உமது ஜனங்கள் சேர்ந்து உம்மை ஆவியோடும் உண்மையோடும் ஆராதிக்கும்
இடமாகவும் .................................................... ஆலயம் எனப் பெயரிட்டுப் பிரத்தியேகப்படுத்துகிறோம். இங்கே கூடும் யாவரும் கடவுளுடைய பரிசுத்த வசனத்தை
உத்தமமாய்க் கேட்டு அவருக்குகந்த ஆவிக்குரிய பலிகளைச் செலுத்துவார்களாக. அவர்கள் சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவின் மேலுள்ள
விசுவாசத்தை அறிக்கை செய்ய வெட்கப்படாமலிருந்து கிறிஸ்துவின் சரீரத்தாலும் இரத்தத்தாலும்
பலம் அடைந்தவர்களாய் அவரது உண்மையுள்ள ஊழியக்காரராக ஜீவகாலம் முழுவதும் நிலைத்திருப்பார்களாக.
ஆமென்.
ஆலயப் பணிமூட்டுகளின்
பிரதிஷ்டை ஜெபபீடம், வேதபாட மேசை, பிரசங்க பீடம்
அன்பின் ஆண்டவரே! இவ்விடத்தில் ஆராதனையில்
பங்கு கொள்வோரும் ஆராதனை நடத்துவோரும் பயன்படுத்தும்படியாக இங்கே படைக்கப்பட்டிருக்கின்ற
ஆலய பணிமூட்டுகளை உம்முடைய கரத்தால் பரிசுத்தப்படுத்தியருள வேண்டுமென்று தாழ்மையாய்
ஜெபிக்கிறோம். இவற்றைக் காணிக்கையாக வழங்கிய
குடும்பங்களை ஆசீர்வதித்தருளும். இவ்வாலயத்தில்
உம்முடைய நாமம் என்றென்றும் மகிமையடைவதாக.
ஆண்டவராகிய இயேசுவின் நாமத்தில் வேண்டிக்கொள்கிறோம். ஆமென்.
ஒவ்வொரு பிரதிஷ்டைப் பணியையும் தொடர்ந்து ஒரு கீதம் பாடலாம்
இவ்விடத்தில்
திருமுழுக்குப் பெறுபவர்களுக்காக ஜெபம் பண்ணக்கடவோம்.
சர்வ வல்லமையுள்ள கடவுளே, எங்கள் பரம பிதாவே,
உமது திருநாம மகிமைக்கென்று நாங்கள் பிரதிஷ்டை செய்யும் இந்த ஞானஸ்நானப் பாத்திரத்தை
(தொட்டியை) ஆசீர்வதிப்பீராக. இங்கு திருமுழுக்குப்
பெறுபவர்கள் உமது பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளவும், சபையில் சேர்ந்து எப்பொழுதும்
விசுவாச வீட்டாருடன் இசைந்திருக்கவும் அருள்புரியும். இங்கு ஆராதனை செய்யும் யாவரும் உம்மோடு உண்டாயிருக்கும்
உடன்படிக்கையைத் தங்கள் இருதயங்களில் நினைவுப்படுத்த இப்பாத்திரம் (இந்த ஆலயம்) சாட்சியாக
விளங்குவதாக. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின்மூலம்
வேண்டிக் கொள்கிறோம். ஆமென்.
இவ்விடத்தில் திடப்படுத்தலைப் பெறுபவர்களுக்காக
ஜெபம் பண்ணக்கடவோம்.
கர்த்தாவே, கைகளை வைக்கும் நியமத்தால்
உமது ஆசீர்வாதத்தைப் பெறும்படி இந்த இடத்தில் முழங்கால்படியிடும் யாவரும் தேற்றரவாளனாகிய
பரிசுத்த ஆவியினால் பலமடையவும், உமது நித்திய ராஜ்யத்தில் சேருமளவும் நாள்தோறும் மென்மேலும்
அவரில் வளர்ந்தேறவும் கிருபை செய்தருளும்படி, எங்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின்
மூலமாய் தேவரீரை வேண்டிக்கொள்கிறோம். ஆமென்.
இவ்விடத்தில் திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகளுக்காக
ஜெபம் பண்ணக்கடவோம்.
கர்த்தாவே, இவ்விடத்தில் பரிசுத்த விவாகத்தில்
இணைக்கப்படுபவர்கள் தங்களுக்குள்ளே செய்து கொள்ளும் வாக்குத்தத்தத்தையும் உடன்படிக்கையையும்
உறுதியாய்க் கைக்கொண்டு நிறைவேற்றவும், எப்போதும் பூரண அன்பும். சமாதானமும் உள்ளவர்களாய்
ஒருமித்து வாழ்ந்து உமது கற்பனைகளின்படி நடந்து வரவும் அனுக்கிரகஞ் செய்ய வேண்டுமென்று
எங்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாய் வேண்டிக்கொள்கிறோம். ஆமென்.
இவ்விடத்தில் தேவ ஆராதனையில் பணிவிடை செய்யும்
எல்லாருக்காகவும் ஜெபம் பண்ணக்கடவோம்.
சர்வ வல்லமையுள்ள கடவுளே, கேரூபின்களும்,
சேராபின்களும் ஓயாமல் புகழ்ந்து போற்றும் பரம ராஜாவே, இங்கு உமது சந்நிதானத்தில் பணிவிடை
செய்யும் எல்லாரையும் உமது ஆசீர்வாதத்தால் ஆதரித்து அவர்கள் இம்மையில் சுத்த இருதயமுள்ளவர்களாய்
ஆவியோடு உமது வசனத்தைப் பகிர்ந்தளிக்கவும், உண்மையோடு உம்மை ஆராதிக்கவும், மறுமையில்
உமது பரம சேனையின் மாசற்ற பணிவிடையில் பங்குபெறவும் கிருபை செய்ய வேண்டுமென்று எங்கள்
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாய் வேண்டிக்கொள்கிறோம். ஆமென்.
கர்த்தருடைய
மேஜை
சர்வ வல்லமையுள்ள கடவுளே, நாங்கள் உமக்கு
முன் மனத்தாழ்மையாய் ஏறெடுக்கும் விண்ணப்பங்களுக்குச் செவி கொடுப்பீராக. இத்திருமேஜையை ஆசீர்வதியும். இதில் படைக்கப்படும் காணிக்கைகள் யாவும் உமக்குப்
பிரியமாயும் உமது அங்கீகாரத்திற்குப் பாத்திரமாயும் இருப்பதாக. திருவிருந்து ஆராதனையில் அப்பத்தைப் பிட்கும்போது
ஆசீர்வதிக்கப்பட்ட உமது திருக்குமாரனை வெளிப்படுத்தியருளும். இங்கிருந்து அறிவிக்கப்படும் திவ்விய வசனம் உள்ளங்களை
ஆண்டு கொள்வதாக. உம்மோடும் பரிசுத்த ஆவியோடும்
சதா காலமும் ஜீவித்து அரசாளுகிற கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாய் வேண்டிக்கொள்கிறோம். ஆமென்.
வேதபாடங்கள் : 1 இராஜா. 8:22-30;
எபேசியர் 2:13-22 (அ) 1 பேதுரு
2: 1-10;
லூக்கா 2:40-49 (அ) மத்தேயு
21:12-16
நிசேயா விசுவாசப்பிரமாணம்
வானத்தையும்
பூமியையும், காணப்படுகிறதும் காணப்படாததுமான எல்லவற்றையும் படைத்திருக்கிற சர்வ வல்லமையுள்ள
பிதாவாகிய ஓரே தேவனை விசுவாசிக்கிறேன்.
ஓரே கர்த்தருமாய், தேவனுடைய ஓரே பேரான குமாரனுமாயிருக்கிற
இயேசு கிறிஸ்துவையும் விசுவாசிக்கிறேன்; அவர் சகல உலகங்களும் உண்டாவதற்கு முன்னே தமது
பிதாவினாலே ஜெநிப்பிக்கப்பட்டவர், தெய்வத்தில் தெய்வமானவர், ஜோதியில் ஜோதியானவர், மெய்
தேவனில் மெய் தேவனானவர், உண்டாக்கப்படாமல் ஜெநிப்பிக்கப்பட்டவர். பிதாவோடே ஒரே தன்மையுடையவர்,
சகலத்தையும் உண்டாக்கினவர்; மனிதராகிய நமக்காகவும் நமக்கு இரட்சிப்பு உண்டாகவும் பரமண்டலத்திலிருந்து
இறங்கி, பரிசுத்த ஆவியினாலே கன்னிமரியாளிடத்தில் அவதரித்து மனுஷனானார்; நமக்காக பொந்தியுபிலாத்துவின்
காலத்தில் சிலுவையில் அறையுண்டு, பாடுபட்டு, அடக்கம்பண்ணப்பட்டார்; வேதவாக்கியங்களின்படி
மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார்; பரமண்டலத்துக்கேறி, பிதாவின் வலது பாரிசத்தில் வீற்றிருக்கிறார்;
உயிருள்ளோரையும் மரித்தோரையும் நியாயந்தீர்க்க மகிமையோடே திரும்ப வருவார். அவருடைய
ராஜியத்துக்கு முடிவில்லை.
கர்த்தருமாய், ஜீவனைக் கொடுக்கிறவருமாய்,
பிதாவிலும் குமாரனிலும் நின்று புறப்படுகிறவருமாய், பிதாவோடும் குமாரனோடும் கூடத் தொழுது
ஸ்தோத்தரிக்கப்படுகிறவருமாய், தீர்க்கதரிசிகள் மூலமாக உரைத்தவருமாயிருக்கிற பரிசுத்த
ஆவியையும் விசுவாசிக்கிறேன். ஒரே பொதுவான அப்போஸ்தலத் திருச்சபை உண்டென்று விசுவாசிக்கிறேன்.
பாவமன்னிப்புக்கென்று நியமிக்கப்பட்ட ஒரே ஞானஸ்நானத்தை அறிக்கையிடுகிறேன். மரித்தோர்
உயிர்த்தெழுதலும், மறுமைக்குரிய ஜீவனும் உண்டாகும் என்று காத்திருக்கிறேன். ஆமென்.
பிரசங்கம்
காணிக்கைப் பாடல்
கடவுளுக்கு துதியுண்டாவதாக
ஒரு ஸ்தோத்திரப் பாட்டு பாடப்பட்டு காணிக்கை
சேகரிக்கப்படும். பாத்திரங்களும், திருமேசை
விரிப்புகளும் காணிக்கைகளுடன் சேர்ந்து சமர்ப்பிக்கப்பட்டு அவைகளுடன் பிரதிஷ்டை செய்யப்படும்.
யாவரும்
நின்று கொண்டிருக்க பின்வரும் பிரதிஷ்டை ஜெபம் ஏறெடுக்கப்படும்.
சர்வ வல்லமையுள்ள கடவுளே, எங்கள் பரம பிதாவே,
உமது ஒரேபேறான குமாரன் என்றும் பாரமல் எங்களுக்காக அவரைத் தந்தருளினீர். அவர் தம்மோடு யாவையும் எங்களுக்கு இலவசமாய் தந்திருக்கிறார். நாங்கள் கொண்டு வந்து உமக்குப் பிரதிஷ்டை செய்யும்
இக்காணிக்கைகளோடு, எங்களையே உமக்கு ஒப்புக் கொடுக்கவும், எங்கள் உடல், உயிர், ஆவி முழுவதாலும்
உம்மை உண்மையாகவும் தாராளமாயும் சேவிக்கவும் கிருபை செய்யும். உமது சேவையிலே நாங்கள் மெய் சந்தோசம் அனுபவிப்போமாக. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் வேண்டிக்கொள்கிறோம். ஆமென்.
ஜெபம் பண்ணக்கடவோம்
மன்றாட்டுகள் ஏறெடுக்கப்படும். பின்பு பின்வரும் ஜெபம் சொல்லப்படும்.
சர்வ வல்லமையுள்ள நித்திய கடவுளே, உம்முடைய
ஆவியினாலே சபை முழுவதும் ஆண்டு பரிசுத்தமாக்கப்படுகிறது. திருச்சபையின் சகல மனிதருக்காகவும், நாங்கள் ஏறெடுக்கும்
விண்ணப்பங்களையும், வேண்டுதல்களையும் ஏற்றுக் கொள்வீராக. ஒவ்வொரு அங்கமும் உமது அழைப்பிலும், ஊழியத்திலும்,
உண்மையோடும், பக்தியோடும் உம்மைச் சேவிக்க உதவிபுரியும். எங்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் வேண்டிக்
கொள்கிறோம். ஆமென்.
ஆலயப் பிரதிஷ்டை
- முகவுரை
வானாதி
வானங்களும் உம்மைக் கொள்ளாது. உலகமனைத்தும்
உமது மகிமையால் நிறைந்திருக்கிறது. எனினும்
உமக்கு ஆராதனை செய்ய இடங்களைப் பிரதிஷ்டை செய்து, அவைகளில் விசுவாசமுள்ள உம்மக்கள்
பேரில் உமது பேரருளின் வரங்களைப் பொழிகிறீர்.
ஆசீர்வாதம்
பரி.
நற்கருணை பரிமாறப்படுமானால் கர்த்தருடைய இராப்போஜன ஆராதனையின் அப்பம் பிட்குதல் பகுதியிலிருந்து
ஆரம்பமாகும்.
No comments:
Post a Comment