துதிக்குப் பாத்திரன் நீயே

துதிக்குப் பாத்திரன் நீயே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

449. இராகம்: ஆனந்த பைரவி,                                                                                   தாளம்: ஆதி.

 

                   “இம்மட்டும் சீவன் தந்த” - என்ற மெட்டு

 

                             பல்லவி

 

                   துதிக்குப் பாத்திரன் நீயே, நிதிக்கருணை வாரியே

                   ததிக்குதவி செய்தாயே

 

                             அனுபல்லவி

 

            துதிக்குநீ நீயே பாத்திரன் கதிக்கும் கருணை நேத்திரன்

            பதிக்குள் மலபல சதிக்கனு தினமும்

            ஒதுக்கி வலுசிறை பதுக்கி னோய் சுப - துதிக்குப்

 

                             சரணங்கள்

.         கொள்ளை நோய் மிகுத்தெங்குமுள்ள திரளுயிர்கள்

            அள்ளிச் சிதறடித்துப் போக

            உள்ளமுடைந்து பெற்றோர் பிள்ளை பறிகொடுத்தோர்

            கொள்ளி யழல் மெழுகென்றாக

            தள்ளாதனைத் தற்பரென் றெள்ளாதெம் மேலேதயை

            கொள்ள மதிகொண் டுன்ற நின்திறல்

            விள்ள அருள்பொழி வள்ளலே என்றும் - துதிக்குப்

 

.       சோனாமரி பொழிந்து நானாகுளம் வழிந்து

            கானாறு ஒடை எங்கும் பொங்கி

            மேனாட் பிரளயமே தானோவென வறியோர்

            ஆனோர் ஓலமிட்டார் தியங்கி

            வானோர் வழுத்துமுயர் கானான் அதிபதியே

            நாணாளும் முழு வாணாளும் அரண்

            ஆனாய் மலைபோல் தானாய் நின்றுமே - துதிக்குப்

 

௩.          யுத்த முனையில் கோடி செத்து மடிந்து வாடி

            இரத்த வெள்ளம் புரண்டு ஓடி

            புத்தி சாலிகள் மகா சுத்தவீரர் விழுந்து

            தத்தளித் தயர்ந்தார் கண் மூடி

            கத்து வாரிதி சூழும் இத்தரை மீது நாங்கள்

            அத்தனே மிக உத்த மர்களோ

            சுத்த தண்ணளி நித்த நித்தமும் - துதிக்குப்

 

௪.          மன்னர் மடிந்தார் தூதர் அன்னர் முடிந்தார் எங்கள்

            முன்னோர் பொடிந்தார் எல்லாம் மாயை

            அன்னவர் புகழ் சீர்த்தி இந்நில வாழ்க்கை செல்வம்

            மின்னல் புகை நிழவின் சாயை

            முன்னவனே இத்தன்மை மன்னும் மண்ணுலகிடை

            அன்னையில் பரிவென்ன இடர் துயர்

            இன்னல் அகற்றினை சொன்ன சொன்னபடி - துதிக்குப்

 

௫.          குற்றம் பொறுத்து நோய்கள் பற்றறத் தொலைத்துயிர்

            முற்றும் அழிவில் நின்று மீட்டு

            உற்ற கிருபை அளவற்ற இரக்கம் கொண்டு

            சுற்றி வளைந்து முடி சூட்டு

            கொற்றவனே அடியார் பற்றும் கொளுகொம்பே முச்

            செற்றலர் சிரம் அற்றிட முழு

            வெற்றி தந்திடும் பொற்றா மரைஅடி - துதிக்குப்

 

௬.         தேவச மாதானம் இப்பாவிகள் உள்ளத் தூடு

            லாவ அருள்செய் தென்றும் தேற்றி

            சாவின் வழிவலக ஆவி வரமும் தந்து

            சேவை செய்துன் தான்இணை சாற்றி

            சீவ னுள்ளோர் நடுவே ஆவி களிகூர்ந் திந்நாள்

            நாவினால் செப தூபம் வாழ்த்துரை

            மேவ வகையருள் தேவ தேவனே - துதிக்குப்

 

௭.          தூய ஆயிரத்துத் தொள் ளாயிரத் தறுபதென்

            புதிய ஆண்டு கண்டோம்

            சேயர் மகிழ்ந்தே எங்கள் வாயால் புகழ்ந்து பாடி

            நேய துதிகள் சால விண்டோம்

            காயமோ டான்மா வைஐங் காய புண்ணியத் தாலே

            ஆயனே உபாயமாய் இன்னும்

            நேயமோடு கா தாவீதின் செய - துதிக்குப்

 

- பேராசிரியர் தா. மாசில்லாமணி அவர்கள், பாளையங்கோட்டை.

இப்பாடல் இற்றைக்கு 45 ஆண்டுகட்கு முன்னர் இயற்றப்பெற்று 1915-ஆம் புத்தாண்டு நாளில் சிவகாசி நகர்கோவிலில் பாடப்பட்டது.

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு