சூரியன் அஸ்தமித்திருண்டிடும்
துயர் தீர வேண்டினரே
351. சகானா சாபு
தாளம்
பல்லவி
சூரியன்
அஸ்தமித்திருண்டிடும் வேளையில்
சூழ்ந்தனர் பிணியாளிகள்-உனை நெருங்கித்
துயர் தீர வேண்டினரே.
அனுபல்லவி
இன்னேரம் உன்தயை தேடும் இவ்வடியாரின்
இன்னலெல்லாம் ஓட அன்பே உன்னருள் ஈவாய்.
- சூரி
சரணங்கள்
1. பேயின் அகோரத்வம் உனைக்கண்டு பறந்தது,
நோயும் நிர்ப்பந்தமும் நீ தொட ஒழிந்தன,
வாய்க்கும் சுகானந்தம் உனை நம்பினோர்க்கெல்லாம்,
தாய்க் கருணையுடையோய், இன்றும் உன் தயை
கூர்வாய். - சூரி
2. இஷ்டரின் துரோகத்தால் இடர் அடைந்துழல்வோரும்,
துஷ்டர் செய்துன்பத்தால் தயங்கித் தவிப்போரும்,
கஷ்டமெல்லாம் தீர்ந்து களிக்கக் கருணை
கூர்வாய்!
அஷ்டதிக்கும் ஆள்வோய், அபயம் அபயம் என்றோம்.
- சூரி
3. எளியோர் வறுமையில் இன்னருள் ஊற்றுவாய்,
விழிப்போடிரவிற் கண்ணீர் விடுவோரைத் தேற்றுவாய்,
வழி தப்பி அலைவோரை வழி காட்டி ஆற்றுவாய்,
பழி பாவம் துணிவோரைத் தடுத்தாண்டு மாற்றுவாய்.
- சூரி
4. சருவ சக்தி சதா காலமும் உனதல்லோ?
வருத்த மெல்லாம் ஓடும் வார்த்தை ஒன்று
சொல்ல,
உரித்தாய்க் கரத்தினால் உன்னடியாரைத் தொடுவாயே,
கருகுங் கங்குலிலும் யாம் களிப்பாய்ச்
சுகிப்போமே. - சூரி
-
சவரிராயன் ஏசுதாசன்
Comments
Post a Comment