என்னபாக்கியம் அம்மா ஏகனருள்


16. (318)      கன்னிமரியாள் கீதம்

பியாகடை                                                     சாபுதாளம்
பல்லவி
          என்னபாக்கியம் அம்மா!-ஏகனருள்
          ஏழைக்குக் கிடைத்த தம்மா!

அனுபல்லவி
            உன்னியே தவம்புரிந் தோர் அனேகரிருக்கக்
            கன்னியெனை நினைத்த கருணையை என்ன சொல்ல? - என்ன

சரணங்கள்
1.         என்னாத்துமாவே! நீ-இறைவனை
            என்னாளுமே துதிப்பாய்!
            என்னாவியே! தேவரட்சகனை யறிந்து
            என்றும் வணங்கிமகா நன்றியோடு களிப்பாய்! - என்ன

2.         பாக்கியவதியானேன்,-இப்பூவின்கண்
            யார்க்கு மதிப்பானேன்;
            வாக்கிலே வல்லபரன் மகிமை எனக்குச் செய்தார்;
            நோக்கிலவ ரரிய நாமம் பரிசுத்தமே. - என்ன

3.         ஆண்டவர் இரக்கம்-அடியார்க்கே
            ஆண்டாண்டாக நிலைக்கும்;
            மீண்டுமவர் புயத்தால் மெத்தப் பராக்கிரமஞ்செய்தார்;
            மேட்டிமையுள்ளவரை மேதினியில் அழித்தார். - என்ன

4.         பலவான்களானோரை-ஆசனம் விட்டுப்
            பாதாளத்தில் தள்ளினார்;
            தலமதில் தாழ்ந்தோரைத் தம்மாசனமுயர்த்தித்,
            தாகம் பசியுள்ளோர்க்குச் சகல நன்மை யளித்தார். - என்ன

5.         நேசன் ஆபிரகாமை-பின் சந்ததியை
            நினைத்திரக்கஞ் செய்தோனாய்,
            தாசன் இஸ்ரவேலைத் தாங்கியே யாதரித்த
            தற்பரன் கிருபையை நித்தமுமறவேனே - என்ன

- சா. ப.

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு