அப்பா அருட்கடலே வரம்


வரம் இவர்க்கு அருள்வாய்

312. (311) பரசு                                             ஆதி தாளம் 
பல்லவி

                        அப்பா, அருட்கடலே, வரம்
                        துப்பாய்[1] இவர்க்கருள்வாய்!

அனுபல்லவி

            செப்பரிதாகிய மெய்ப்பொருளை எங்கும்
            சென்றறிவித்திட நிறைவாய். - அப்பா

சரணங்கள்

1.         பண்டு புறாவுருகொண்டு இறங்கிய
            பான்மை இவர் சிரமீதே,-திருத்
            தொண்டு செய்யும்படி வல்லாவியால் முடி
            சூட்ட இரங்கும் இப்போதே. - அப்பா

2.         நன்னயமாகவே பன்னிரு வேதியர்
            நாவில் எழுந்துரை யாடிப்,-பேயின்
            சன்னதம்[2] ஓய்ந்திடப் பண்ணியவாறிவர்
            தம்மிலும் வந்தசை வாடி. - அப்பா

3.         இன்பாய் உலகை இமைக்குள் அமைத்தவர்
            ஏவைக் குலங்கள் ஈடேறப்,-பெருந்
            துன்பாய் இறந்த பேரன்பைத் தெளிவுறச்
            சொல்லு முந்நூலினில் தேற. - அப்பா

4.         தேகமும் ஆவியும் ஜீவியம் யாவையும்
            தீயவை அப்புறம் ஏகத்,-திரி
            யேகருக் கர்ப்பிகமாக[3] ஒப்பிக்கும் நல்
            எண்ணம் இவர்க்குள் உண்டாக. - அப்பா

5.         முந்து நடுவு முடிவுமிலா ஒரு
            மூவரில் அக்கினிக் கொழுந்தே,-தேவ
            சிந்தை இவரில் சிறந்தொளி வீசிடச்
            செய்வதற் கிங்கனம் எழுந்தே. - அப்பா

- எ.ஐ. குளோரியா




[1] வலிமையாக
[2] இருப்பு
[3] அர்ப்பணமாக

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு