பரத்திலே யிருந்துதான்
Vom Himmel hoch da komm
Bavarian
195
67 L.M.
1. பரத்திலே
யிருந்துதான்
அனுப்பப்பட்ட தூதன் நான்,
நற்செய்தி அறிவிக்கிறேன்,
பயப்படாதிருங்களேன்.
2. இதோ, எல்லா ஜனத்துக்கும்
பெரிய நன்மையாய் வரும்
சந்தோஷத்தைக் களிப்புடன்
நான் கூறும் சுவிசேஷகன்.
3. இன்றுங்கள் கர்த்தரானவர்
மேசியா உங்கள் ரட்சகர்,
தாவீதின் ஊரில் திக்கில்லார்
ரட்சிப்புக்காக ஜென்மித்தார்.
4. பரத்திலே நாம் ஏகமாய்
இனி இருக்கத்தக்கதாய்
இக்கட்டும் பாவமுமெல்லாம்
இம்மீட்பரால் நிவிர்த்தியாம்
5. குறிப்பைச் சொல்வேன்; ஏழையாய்
துணியில் சுற்றப்பட்டதாய்
இப்பிள்ளை முன்னணையிலே
கிடக்கும்; ஆர், கர்த்தர் தாமே.
2ம் பாகம்
விசுவாசிகள் சொல்லுகிறது
1. களிப்பாய் நாமும் மேய்ப்பரின்
பின்னாலே சென்று, ஸ்வாமியின்
ஈவானதை நாம் கேட்டாற்போல்
சென்றுமே பார்ப்போம், வாருங்கள்.
2. ஆர் அங்கே முன்னணையிலே
கிடக்கிறார்? என் மனதே,
இப்பிள்ளையை நீ உற்றுப்பார்,
இதே உன் இயேசு ஸ்வாமியார்.
3. என் ஸ்வாமி, வாழ்க, பாவியை
நீர் கைவிடாமல் இத்தனை
தாழ்வாய் என்னண்டை வந்தது
அளவில்லாத தயவு.
4. எல்லாம் சிஷ்டித்த தேவரீர்
இம்மட்டுக்கும் இறங்கினீர்;
இங்கே இப்புல்லின்மேல், ஐயோ,
நீர், ஸ்வாமி, வைக்கப்பட்டீரோ!
5. ஆ, இன்பமான இயேசுவே,
மெய் ஆஸ்தியான உம்மையே
நான் பெற்றிருக்க, என்றைக்கும்
என் நெஞ்சில் வாசமாயிரும்.
6. அத்தால் நான் நித்தம் பூரிப்பாய்
இருந்து, மா சந்தோஷமாய்
இம்மாய்கையை வெறுக்கிறேன்,
கதியாம் உம்மைப் பாடுவேன்
7. பிரிய ஏக மைந்தனை
பாராமல் தந்த ஸ்வாமியை
இஸ்தோத்திரிப்போம், பூமிக்கு
ரட்சிப்பின் நாள் உதித்தது.
Comments
Post a Comment