மன்னுயிர்த் தொகுதியீ டேற வானினும்


திருநாமத் தோத்திரம்

100. சங்கராபரணம்                                        ஆதி தாளம்

1.         மன்னுயிர்த் தொகுதியீ டேற வானினும்
            இந்நிலத் தினும்பிறி திலையென் றேமறை
            பன்னியேத்[1] தெடுப்பது, பாவ ஜீவருக்-கு
            இன்னமு தாயதி யேசு நாமமே.

2.         தெருளெலாந் தனதெனுந் தெய்வ மாமறைப்
            பொருளெலாந் தனதெனப் பொலிந்தி லங்குவ-து
            அருளெலாம், அன்பெலாம், அறனெலாம் வளர்-த்து
            இருளெலாந் தொலைப்பதி யேசு நாமமே.

3.         நித்திய ஜீவனும் நெறியும் போதமும்
            சத்திய நிலையமும் தானென்றுள்ளது.
            பத்தியில் பரவுவோர் பரம வீடுற
            இத்தலத் திறத்ததி[2] யேசு நாமமே.

4.         நன்னெறி புகுத்திடும், நவையி[3] னீக்கிடும்
            இன்னிலை யகற்றிடும் இகல் செகுத்திடும்,
            உன்னதத் துய்த்திடும், ஒருங்கு காத்திடும்,
            எந்நலத்தையுந் தரும் யேசு நாமமே.

5.         அன்பினுக் குருவநல் லறத்துக் காலயம்
            மன்பதைக் கருண்மழை வழங்கு பைம்புயல்,
            நின்பர மென்றினை வோர்க்கு நித்தியபேர்
            இன்பசஞ் சீவிதம் யேசு நாமமே.     

6.         தருமமும் ஒழுக்கமும் தவமும் ஞானமும்
            கருமமும் ஈதலால், கருதில் யாதுமோர்
            அருமையும் பயனுமொன் றில்லை யாதலால்,
            இருமையுந் துணையெனக் கியேசு நாமமே.

- எ.ஆ. கிருஷ்ணன்


[1] பன்னி ஏத்து எடுப்பது - சொல்லிப் சொல்லிப் புகழ்வது
[2] தங்கியது
[3] குற்றம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு