ஐயையா நான் ஒரு மா பாவி


என்னை ஆண்டு நடத்துவீர்

122. (132) சயிந்தவி                                                ஆதி தாளம்

பல்லவி

                   ஐயையா, நான் ஒரு மா பாவி;-என்னை
                   ஆண்டு நடத்துவீர், தேவாவி!

சரணங்கள்

1.         மெய் ஐயா, இது தருணம், ஐயா;-என்றன்
            மீதிலிரங்கச் சமயம், ஐயா;
            ஐயையா, இப்போ தென்மேல் இரங்கி-வெகு
            அவசியம் வரவேணும், தேவாவி! - ஐயையா

2.         எனதிருதயம் பாழ்நிலமாம்;-ஏழை
            என்னைத் திருத்தி நீர் அன்பாகத்
            தினமும் வந்து வழி நடத்தும்,-ஞான
            தீபமே, உன்னத தேவாவி! - ஐயையா

3.         ஆகாத லோகத்தின் வாழ்வை எல்லாம்-தினம்
            அருவருத்து நான் தள்ளுதற்கு
            வாகான[1] சுத்த மனம் தருவீர்,-நீர்
            வல்லவராகிய தேவாவி. - ஐயையா

4.         பத்தியின் பாதை விலகாமல்,-கெட்ட
            பாவத்தில் ஆசைகள் வையாமல்
            சத்திய வேதப்படி நடக்க,-என்னைத்
            தாங்கி நடத்திடும், தேவாவி! - ஐயையா

5.         அன்பு, பொறுமை, நற் சந்தோஷம்,-என்
            ஆண்டவரின் மேல் விசுவாசம்,
            இன்ப மிகு மெய்ச் சமாதானம்,-இவை
            யாவும் தருவீரே, தேவாவி! - ஐயையா

6.         ஏசுகிறிஸ்துவில் நான் சார்ந்து,-அவர்
            இடத்திலேயே நம்பிக்கை வைக்க,
            மாசில்லாத் துய்யனே, வந்துதவும்;-நீர்
            வராமல் தீராதே, தேவாவி! - ஐயையா

- பாக்கியநாதன் தாவீது


[1] அழகான

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு