ஐயா நீரன்று அன்னா காய்பாவின் வீட்டில்


யேசையாவே

54. (109) நீலாம்புரி.                              ஆதிதாளம்

கண்ணிகள்

1.          ஐயா, நீரன்று அன்னா காய்பாவின் வீட்டில்
            நையவே பட்ட பாடு, ஏசையாவே!
            கைகள் கட்டப்பட்டதோ? கால்கள் தள்ளாடினவோ?
            கயவர்கள் தூஷித்தாரோ, ஏசையாவே!

 2.        திரு முகம் அருள் மங்க, செங்குருதிகள் பொங்க‌,
            இருளர்[1] கஸ்திகொடுக்க, ஏசையாவே!
            பொறுமை, அன்பு, தயாளம் புனிதமாக விளங்க‌
            அருமைப் பொருளதான ஏசையாவே!

 3.        முள்ளின் முடியணிந்து, வள்ளலே, என் றிகழ‌
            எள்ளளவும் பேசாத ஏசையாவே!
            கள்ளன் போலே பிடித்துக் கசையால்[2] அடித்து மிகக்
            கன்மிகள் செய்த பாவம், ஏசையாவே!

 4.        கற்றூணில் சேர்த்திறுக்கிச் செற்றலர்தாம்[3] முறுக்கிக்[4]
            கர்வங்கொண்டே தூஷிக்க, ஏசையாவே!
            சற்றுமிரக்கமில்லாச் சண்டாளன் ஓடி வந்து‌
            சாடிக் கன்னத்தறைய ஏசையாவே!

5.         பொன்னான மேனியதில் புழுதி மிகப் படிய
            புண்ணியன் நீர் கலங்க, ஏசையாவே!
            அண்ணலே, அன்பருய்ய அவஸ்தைகளைச் சகித்தீர்!
            அடியேனைக் காத்தருளும், ஏசையாவே!

- சவரிமுத்துப் போதகர்


[1] கொடியவர்
[2] சவுக்கால்
[3] பகைவர்கள்
[4] சினந்து

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு