ஆதி அந்தம் இல்லானே


ஆதியந்த மில்லானே

89. (62) முகாரி                                    ஆதிதாளம்

1.         ஆதி அந்தம் இல்லானே, அளவில்லா வல்லபனே,
            அன்பே, மானுடவதாரத் திருவடிவே,
            மாது பொருட்டாலே மாடடையுங் கொட்டிலிலே
            வானத்திலே இருந்து வந்தீரோ, மன்னவனே?

2.         அன்பே, என் ஆருயிரே, ஆனந்தப் பேரொளியே,
            ஆர்க்குந் தயாபரமே, அற்புத கருணாகரமே,
            இன்பப்ர வாகமே, இம்மானுவேல் அரசே,
            ஏசுக் கிறிஸ்தையாவே, ரட்சியும் ஒரே கர்த்தாவே.

3.         ஆராய்தல் இல்லாத ஆழக்ருபா நதியே,
            ஆரும் அளவறுக்கக் கூடாத அற்புதமே,
            வாராயோ? பாவிகளைப் பாராயோ, பார்த்திரங்கி
            வானத்தில் நின்றெழுந்து வந்த பரிபூரணமே?

4.         தேவ கிருபை பொழிய, ஜீவ நதி பெருக,
            சீயோனின் மக்கள் எல்லாம் சேர்ந்ததிலே பருக,
            ஏவை துயர் அகல, எவ்வுயிரும் பிழைக்க,
            ஸ்தீரியின் வித்தில் வந்தீரோ, இஸ்ராவேலின் கோமானே?[1]

5.         ஞான மலை அருவி நன்மைப்ர வாகம் வர,
            நாடனைத்துந் தழைக்க, நல்லோர் குழாம்[2] செழிக்க
            வானில் மகிமை பெற, மண் மீதில் ஆசி உற,
            மாந்தரில் அன்புண்டாக வந்தீரோ மானுவேலே?

- வே. சாஸ்திரியார்


[1] அரசனே
[2] கூட்டம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு