இத்தரைமீதினில் வித்தகனா யெழுந்த
உத்தமனே தோத்திரம்
97. சாவேரி ஆதிதாளம்
பல்லவி
இத்தரைமீதினில் வித்தகனா[1] யெழுந்த
உத்தமனே தோத்ரம்!
அனுபல்லவி
நித்தமென் னிருதயம் சுத்தமாக விளங்கச்
சித்தங்கொள்வாயென்மீது தத்தஞ்செய்தேனிப்போது. - இத்தரை
சரணங்கள்
1. கண்ணே மணியே உன்னைக் கண்டபின் விடுவேனோ?
காதலாய்ப் பவத்தில்வீண் காலம்பின் னிடுவேனோ?
விண்ணே உனைமறந்து வேறொன்றைத் தொடுவேனோ?
வேஷ மார்க்கம் நடந்து வேதனைப் படுவேனோ? - இத்தரை
2. அன்னையும் தந்தையும் ஆளும் பொருளும் நீயே;
ஆசாரியன் தீர்க்கன் ஆயனும் ஆடும் நீயே;
உன்னைப் பிரிந்தால் வேறு போக வழியிலையே;
உத்தம சத்திய முத்தே அதிபதியே! - இத்தரை
3. தேனே, கனியே, என்றுந் திகட்டாத அமிர்தமே,
தீயனென் மனப்புண்கள் ஆற்றிடும் அவிழ்தமே,
வானே யிருந்துபுவி வந்தபெரும் பதமே,
மறவாது திருப்புகழ் வரைவேன் நிதம் நிதமே. - இத்தரை
4. வானாசனத்திலிருந்து மனுக்குலத்தை நினைத்து
தானாமனமுவந்து தாரணியில்[2] பிறந்து,
கோனாய் விளாங்கா நிற்கும் குருவேசுநாதனை நான்
ஏனோ மறந்து இங்கே வீணே தவிப்பது காண். - இத்தரை
5. செஞ்சோதிபோன்ற அவன் சீர்பாதத்தை எந்நாளும்
நெஞ்சாசனத்தில் வைத்து நீடூழிவாழ்தல் வேணும்,
பஞ்சாய்ப் பறந்திடுமென் பஞ்சபாதகம் யாவும்,
அஞ்சேன் அஞ்சேனே, தேவ தஞ்சம் கண்டதே போதும் - இத்தரை
- சா. பரமானந்தம்
Comments
Post a Comment