பொற்பு மிகும் வானுலகும்


காரணமேன் கோவே

48. (94) நீலாம்புரி                                          ரூபகதாளம் 
தரு 
சீயோன் 1        பொற்பு[1] மிகும் வானுலகும்
                        பூவுலகும் படைத்த பரப்பொருளே,-இங்கே
                        பொந்திப்பிலாத் தரண்மனையில்
                        வந்து நிற்கும் காரணமேன், கோவே?

கிறிஸ்து          கற்பனை மீறிய பாவத்தால்
                        கடின நரகாக்கினைப் படாமல்-உன்னைக்
                        காப்பதற் கிங்கே ஞாய‌
                        தீர்ப்பில் உற்றோம், சீயோனின் மாதே.

சீயோன் 2       துய்ய திரு மேனி எல்லாம்
                        நொய்ய உழுத நிலம்போல ஆகி,-உன்‌
                        சோரி[2] சிந்த, வாரதினால்
                        நீர் அடிக்கப்பட்டதென்ன, கோவே?

கிறிஸ்து          வையகத்தின் பாதகத்தால்
                        பெய்யும் நடுதீர்வையெல்லாம் ஆற்ற,-இந்த‌
                        வாதை எல்லாம் பட்டிறக்க‌,
                        போத[3] மனம் சம்மதித்தோம், மாதே.

சீயோன் 3       செய்ய[4] கண்கள் உறச் சிவந்து,
                        திருக் கன்னங்கள் தடித்து, மிக வீங்கி,-முழுச்
                        சென்னியின் ரோமங்கள் எல்லாம்
                        வின்னமுற்றிங்[5] கிருப்பதென்ன, கோவே?

கிறிஸ்து        மையிருளில் குருக்களுடை
                        மாளிகையில் படுத்தின பாடெல்லாம்-இங்கே
                        வன் கொலைஞரால் அடிக்க‌,
                        பங்கமுற்ற கோலம் இது, மாதே 
- வே. சாஸ்திரியார்


[1]. அழகு
[2]. இரத்தம்
[3]. பூரணமாய்
[4]. அழகான
[5]. சிதைவு

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு