சத்தாய் நிஷ்களமாய் ஒரு சாமிய மும் இலதாய்


உன்னையல்லாமல் எனக்கார் துணை

1. சங்கராபரணம்                                                      ரூபகதாளம்

1.         சத்தாய் நிஷ்களமாய்[1] ஒருசாமிய மும்[2]இலதாய்,
            சித்தாய்[3] ஆனந்தமாய்த் திகழ்கின்ற திரித்துவமே,
            எத்தால் நாயடியேன் கடைத்தேறுவன் என்பவந்தீர்ந்-து;
            அத்தா, உன்னையல்லால் எனக்கார்துணை, யாருறவே?

2.         எம்மா விக்குருகி உயிரீந்து புரந்ததற்கோர்[4]
            கைம்மா றுண்டுகொலோ? கடைகாறுங் கையடையாய்,
            சும்மாரட்சணைசெய், சொல்சுதந்தரம் யாதுமிலேன்,
            அம்மான், உன்னையல்லால் எனக்கார்துணை, யாருறவே?

3.         திரைசேர் வெம்பவமாம் கடல்மூழ்கிய தீயரெமைக்
            கரைசேர்த் துய்க்க[5]வென்றே புணையாயினை[6] கண்ணிலியான்,
            பரசேன் பற்றுகிலேன்; என்னைப்பற்றிய பற்றுவிடாய்,
            அரசே, உன்னையல்லால் எனக்கார்துணை, யாருறவே?

4.         தாயே, தந்தைதமர், குருசம்பத்து நட்பெவையும்
            நீயே எம்பெருமான், கதிவேறிலை நிண்ணயங்காண்;
            'ஏயே' என்றிகழு உலகோடெனக் கென்னுரிமை?
            ஆயே, உன்னையல்லால் எனக்கார்துணை, யாருறவே?

5.         பித்தே றிச்சுழலும் ஜெகப்பேய்பிடித் துப்பவத்தே
            செத்தேன்; உன்னருளால் பிழைத்தேன்மறு ஜென்மமதாய்;
            எத்தோ ஷங்களையும் பொறுத்தென்றும் இரங்குகவென்-று
            அத்தா, உன்னையல்லால் எனக்கார்துணை, யாருறவே?
6.         துப்பார்[7] சிந்தையிலேன் மறைந்தீட்டிய[8] தொல்வினையும்
            தப்பா தேவெளியா நடுநாளெனைத் தாங்கிக்கொள்ள,
            இப்பா ருய்யவென்றே மனுக்கோலமெ டுத்த எங்கள்
            அப்பா உன்னையல்லால் எனக்கார் துணை, யாருறவே?
-எ.ஆ. கிருட்டிணன்


பாடல் வரிகளின் பொருள்:
சத்தாய் = சத்தியமாய்/மெய்யாய் (இருக்கிறவராய் இருக்கிற)
ஒருசாமிய மும் இலதாய், = ஒப்புமைக்கு வேறு எந்த சாமியும் இல்லாததாய்
அம்மான்=தந்தை/கடவுள்
அத்தா->அத்தன்= தகப்பன்
துப்பார் = தூயவர்


1)
சத்தியமாய்/மெய்யாய் (இருக்கிறவராய் இருக்கிற) எங்கும் நிறைந்திருக்கிற
ஒப்பான வேறு எந்த சாமியும் இல்லாத  / ஒப்பில்லா தன்மையுடையவராயிருக்கிற
சர்வ ஞானியாய் / அனைத்தையும் அறிந்தவராய் பேரின்பமாய் / மெய் ஆனந்தமாக திகழ்கின்ற
திரித்துவ தேவனே

நாயைபோன்ற கீழ்நிலையிலிருக்கும் நான் (தனியாக)
என்ன செய்து/எவ்வாறு/எப்படி என் பாவங்களை எல்லாம் தீர்த்து மீள முடியும்
(அவ்வாறு எனது பாவத்திலிருந்து மீள்வதற்கு)
அத்தா/அத்தன்/ தகப்பனே உன்னைவிட்டால் எனக்கு யார் துணை? யார் உறவு?

2)
எம் ஆவிக்கு / ஆன்மாவிக்கு  மனம் இறங்கி தன் உயிரையே கொடையாக கொடுத்து காப்பாற்றியதற்கு / இரட்சித்ததற்கு / மீட்டுக் கொண்டு வந்ததற்கு
ஏதாவது கைமாறு / பிரதிபலன் உண்டோ என்று கடை காறும் / உலகின் எல்லை எல்லாம் தேடியும் கிடைக்கவில்லை

சும்மா/விலையில்லாமல் என்னைக் காப்பாற்றும்/ இரட்சியும் என்று சொல்வதற்குகூட சுதந்திரம் எனக்கில்லை.
(அவ்வளவு பாவியானவன் நான்)
அம்மான்/தந்தையே/கடவுளே உன்னைவிட்டால் எனக்கு யார் துணை? யார் உறவு?

3)
பெருங்கடலாய் திரண்டுள்ள எம் பாவமாய் கடலிலே மூழ்கிய எம்மை
கரை சேர்த்து காப்பாற்ற தெப்பமாக/படகாக வந்த உம்மை
கண்ணில்லாதவனைப்போல/பார்வையற்றவனைப்போல் நான் பிடித்துக்கொள்ளவில்லை/பற்றவில்லை.
ஆனால், (இவ்வாறு உம்மை பற்றாது இருக்கிற)
என்னை நீர் கைவிடாது காப்பாற்றிக்கொண்டிருக்கிறீரே.
அரசே உன்னைவிட்டால் எனக்கு யார் துணை? யார் உறவு?

4)
தாயாக, தந்தையாக, உறவினராக, குருவாக, செல்வமாக, நட்பாக
என் பெருமானாகிய நீயே திகழ்கின்ற உம்மைவிட வேறு கதி/ஆதரவு எனக்கில்லை.
ஏயே என்று என்னை இகழும் இந்த உலகத்தோடு எனக்கு என்ன உரிமை உள்ளது.
(இந்த உலகோடு எனக்கு எந்த சம்மந்தமும் இல்லை)
ஆயே/ தாயை போன்றவரே உன்னைவிட்டால் எனக்கு யார் துணை? யார் உறவு?

5)
பித்துபிடித்து திரியும் உலகத்தின் பேயால் பிடிக்கப்பட்டு, என் பாவத்தால் செத்தேன்
உமது அருளால்/கிருபையால் மறு ஜென்மமாய் பிழைத்தேன்./மறு பிறப்பு அடைந்தேன்.
எல்லா பாவ தோசங்களையும் பொறுத்து எப்போதும் எனக்கு இரங்கும் என்றேன்
அத்தா/அத்தன்/ தகப்பனே உன்னைவிட்டால் எனக்கு யார் துணை? யார் உறவு?

6)
தூயவர்/கடவுள் இருக்கிறார் என்ற சிந்தை இல்லாமல், (உலகோர் கண்ணுக்கு) மறைத்து நான் இதற்குமுன் செய்த/பழைய வினை/தீயசெயல் தப்பாமல் வெளியாகும் நடுநாள்/நியாயத்தீர்ப்பு நாளிலே என்னை தாங்கிக் கொள்ள/ ஆதரித்து காப்பாற்றுவதற்கு
இந்த பார் உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே மனித உருவம் எடுத்த
எங்கள் அப்பா உம்மைவிட்டால் எனக்கு யார் துணை? யார் உறவு



[1] ஓரிடமென்றில்லாமல்
[2] ஒப்புமை
[3] அறிவாய்
[4] காப்பாற்றியதற்கோர்
[5] தப்புவிக்க
[6] தெப்பமானாய்-படகானாய்
[7] தூய
[8] மறைந்து செய்த

Comments

  1. Thanks for posting the meaning of this beautiful song. Helps me to sing meaningfully. God bless you.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி!

      Delete

Post a Comment

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு