தோத்திரம் புகழ் கீர்த்தனம்


தோத்திரம் புகழ் கீர்த்தனம்

13. (280) ஆனந்த பைரவி                                        ரூபகதாளம்

பல்லவி

            தோத்திரம், புகழ் கீர்த்தனம், ஜெய சோபனம் உமக்கையா!-துதி
            சொல்லவும் தீதை வெல்லவும் க்ருபை சூட்டுவீர், கிறிஸ்தையா!

அனுபல்லவி

            கோத்திரவழி சிறந்த யூத நல் கொற்றவா, தேவபாலா,
            மனுவேலா, மறைநூலா, செங்கோலனு கூலா.- தோத்

சரணங்கள்
1.         எந்தனை மீட்க நீர் இந்த உலகினில் வந்து பிறந்தீர்; நன் மனுவாய்- மறை
            ஏற்றித் தினம் எனை ஆற்றி நன் மொழியால் தேற்றினீர்; முற்றிலும் தனுவாய்[1]
            நிந்தை அடைந்து மெய்ச் சொந்த உதிரத்தைச் சிந்தினீர்; எத்தனை பரிவாய்- தேவ
            நீதியும் விளங்கச் செய்து பவமனு சாதிக்கிரங்கி நற்குருவாய்
            நின்றீரே, நடுவராய் நின்றீரே; தீதை எல்லாம்
            கொன்றீரே, பசாசையும் வென்றீரே, ஜெயம் கொண்டீரே நித்ய. - தோத்தி

2.         சுத்த சுவிசேஷ சத்தியமொழியை வித்தரிக்க வரந்தாரும்;-நேய
            சூரிய கிரண வீரியத்தால் எனக் காரோக்கியம் அருள்கூரும்;
            நித்தம் எனைத் தேவ பத்தியில் நடத்திச் சித்தம் இரங்கிக் கண்பாரும்;- கரம்
            நீட்டிக் கிருபையைச் சூட்டிக் கவலையை ஓட்டி என் துயரைத் தீரும்;
            நில்லும், ஐயா, என் பக்கத்தில் நில்லும், ஐயா; தினம் நலம்
            சொல்லும், ஐயா; தீயோன் தனை வெல்லும், ஐயா; தீதைக் கொல்லும், ஐயா, துய்யா! - தோத்தி

3.         நித்திய ஜீவனைப் பெற்றும்மோடிருக்கச் சுத்தி கரித்தென்னை ஆளும்;-பவ
            நிந்தையோ டென் சுய கந்தை[2] அகற்றி மெய் விந்தைக் கிருபையால் சூழும்;
            சத்திய வசனவித்தால் எனை ஜெனிப்பித் தென் மனதினில் வாழும்; - பதஞ்
            சாற்றித் தினம் உமைப் போற்றிப் பணிந்திடத் தேற்றி எனை அரசாளும்;
            சற்குருவே, கிறிஸ்தெனும் சற்குருவே, ஜீவன் உள
            சொற்குருவே, நித்தியானந்த நற்குருவே, பரப் பொற்குருவே, தேவே. - தோத்தி
- மரியான் உபதேசியார்




[1]. சிறுமையாகி
[2] சுய அகந்தை

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு