ஈசன் வந்து சிலுவையில் மாண்டான்
இதைப்பாடிய கவிராய
வித்வானும் தேசபக்தனுமாகிய சுப்பிரமணிய பாரதி ஓர் இந்துவாயினும் எவ்வளவு அருமையாய்
கிறிஸ்துவையும் மகதலேனா மரியாளையுங் குறித்துப் பாடியிருக்கிறார்! இவர் கிறிஸ்தவ வேதாகமத்தைத்
தமிழில் புதிதாய் மொழிபெயர்க்கவும் எண்ணியிருந்தாராம். ஆனால் 1921-ஆம் ஆண்டு மரணமாகிவிட்டார். பிறந்தது 1882.
1. 'ஈசன் வந்து
சிலுவையில் மாண்டான்;
எழுந் துயிர்த்தனன் நாள் ஒரு மூன்றில்;
நேச மா மரியா மக்தலேனா
நேரிலே யிந்தச் செய்தியைக் கண்டாள்'.
தேசத்தீர்! இதன் உட்பொருள் கேளீர்:-
தேவர் வந்து நமக்குட் புகுந்தே
நாச மின்றி நமை நித்தங் காப்பார்,
நம் அஹந்தையை நாம் கொன்று விட்டால்,
2. அன்பு காண் மரியா மக்தலேனா,
ஆவி காணுதிர் யேசு கிறிஸ்து
முன்பு தீமை வடிவினைக் கொன்றால்
மூன்று நாளினில் நல்லுயிர் தோன்றும்.
பொன் பொலிந்த முகத்தினிற் கண்டே,
போற்றுவாள் அந்த நல்லுயிர் தன்னை,
அன்பெனும் மரியா மக்தலே னா.
ஆஹ! சாலப் பெருங்களி யிஃதே.-
3. உண்மை யென்ற சிலுவையிற் கட்டி,
உணர்வை ஆணித் தவங்கொண் டடித்தால்
வண்மைப் பேருயிர் - யேசு கிறிஸ்து
வான மேனியில் அங்கு விளங்கும்.
பெண்மை காண் மரியா மக்தலே னா,
பேணும் நல்லறம் யேசு கிறிஸ்து.
நுண்மை கொண்ட பொருளிது கண்டீர்
நொடியி லிஃது பயின்றிட லாகும்.
சி.
சுப்பிரமணிய பாரதியார்.
Comments
Post a Comment