பொன்னேசு தம்புரான் நன்னேச இரட்சகன்
364.
“ஆனந்தமே
பரமானந்தமே”
என்ற மெட்டு.
பல்லவி
பொன்னேசு
தம்புரான்
நன்னேச இரட்சகன்
என்னை நேசித்துதன் சீவன் விட்டார்.
சரணங்கள்
1. சொர்க்கச் சிங்காசனம் சொந்தப் பிதாமடி
தூதரின் சேவையும் நீத்தெனக்காய்
ஏழையைப் போலவர் மேதினி யில்சீவித்
தேழையென் சாபத்தை ஏற்றுக் கொண்டார் - பொன்
2. அன்னையைப் போலவும் அன்புள்ள இரட்சகன்
கள்ளனைப் போலவே எண்ணப்பட்டார்,
உள்ள முருகுது நெஞ்ச முடையுது
கண்ணீர் சொரியுதென் அண்ண லுக்காய் - பொன்
3. சங்கட சாகரந் தன்னிற் சாடி யற்ப
சாதுவை இரட்சிக்கும் நேச னிதோ!
அத்தனே யணைத்து அன்பா யெடுத்துவும்
சித்தஞ் செய்யும் பிள்ளை யாக்கிடுமே - பொன்
4. பாவந் நிரம்பிய தானமதில் வல்ல
தேவ கிருபையும் பெருகிற்றே
ஆச்சரியமே மகா பாவியில் பாவிநான்
அன்பின் சொரூபியின் இராச்சியத்திலாம் - பொன்
5. பூலோக மாயையில் பேராவல் மேற்கொண்டு
காலம் வீணாய்க் கழி யாதபடி,
சாலோக இராச்சியத்தின் சொர்ணக் கிரீடத்தில்
வாஞ்சை கொள்ள ஏவும் பொன்னேசுவே - பொன்
6. பாவம் செய்யாதெனைக் காபந்து செய்திடத்
தேவ சுதனிடம் கையளித்தேன்
இராப்பகல் நீரென்னைப் பாவத்தி னின்றுக
னாவிலும் காத்திடும் தேவரீரே - பொன்
7. தேவ புத்ரன் கோடாகோடித் தூதர் சூழ
மேகங்கள் மேலவர் வேகமதாய்,
வந்திடுங் காலத்தில் அன்பாயணைத்து என்
சங்கடந் தீர்த்திடும் துங்கவனே. - பொன்
Comments
Post a Comment