20 April 2019

சேனைகளின் கர்த்தரே நின்


நின் திருவிலம் அளவற இனிதே

288. பிலஹரி                                                 ஆதிதாளம்

பல்லவி
            சேனைகளின் கர்த்தரே! நின்
            திருவிலம்[1] அளவற[2] இனிதினிதே!

அனுபல்லவி

                        வானவானங்கள் கொள்ளாத
                        ஈன ஆன்மாவைத் தள்ளாத - சேனை

சரணங்கள்

1.         திருவருளிலமே, கணுறும்[3] உணரும்
            தெருளம்பகமே,[4] இனிதுறும் நிசமிது - சேனை

2.         ஈண்டடியார் கேட்டிடும், நின்வசனமினிதே, இனிதே!
            இகபர நலமொளிர் இதமிகு பெயருள
            எமதரசெனும் நய. - சேனை

3.         புவியோர் பதிவான்[5] புகநிதியே![6]
            புனருவி ருறுமுழுக் கருளினிதே!
            புதுவிடமே, புகுமனமே, புதுமதியே!
            பரிவொடு இனிதருள்! - சேனை

4.         பேயோட புவி பேதை மாமிசம்
            பேணிடாதடியாருனைப்
            பேறு தந்தவனே, யெனச்சொலி
            பேணிடத்துணை ஈவையே!
            பேசருமுன்னந்தம், பேதைகளின் சொந்தம் பேதமிலானந்தம்
            பிசகொழியே, திடமளியே!
            பெருமலையினிலரு முயிர்தரும் - சேனை

5.         ஆலய மது நிறைவாக,
            அவைக் குறை வொழிந்தேக,
            அவரவருனதில மெனமன விடர்சாக,
            அருளும் பொருளுந் தெருளும் செறிந்திடும்,
            ஆலய பர னேச,
            ஆசுக மது வீச,
            ஆரண மொழி பேச,
            ஆ! புது எருசலையாம்
            ஆலய மொரு நிலையாம்
            அது நிக ரெது? - சேனை

- ஞா. சாமுவேல்


[1] திருவில்லம் (ஆலயம்)
[2] அளவில்லா
[3] கண்ணுறும்
[4] கண்
[5] கடவுளின் வானலோகம்
[6] ஏற்பாடே

ஓ ஸ்திரீ வித்தேசையா


எம்மைக் கண் பாராயோ?

287. (281) சயிந்தலி.                                                சாபுதாளம்

பல்லவி 
                    ஓ! ஸ்திரீ வித்தேசையா,
                    அன்புகூராய்? துன்பம் தீராயோ?

அனுபல்லவி

            வஸ்தோரே, கிறிஸ்துவேதா, மானுவேலே, யேசுநாதா,
            வந்தெமை க்ருபைக் கண் பாராயோ? - ஓ!

சரணங்கள்

1.         ஆதி மானிடர் புரிந்த பாதகம் தொலைக்க வந்த
            அண்ணலே, உமக் கபயமே!
            ஓ! ஸ்திரீ வித்தேசையா,
            ஆதரித் திரங்க வேண்டுமே. - ஓ!

2.         எத்தனை மனக் கிலேசம்? நித்தமும் சத்துருக்கள் மோசம்;
            எந்தையே கைவிட்டுவிடாதேயும்,
            ஓ! ஸ்திரீ வித்தேசையா,
            எப்படியும் காத்தருள் மெய்யா. - ஓ!

3.         ஆடுகள் சிதறிப்போச்சோ? அன்னியருக் கிஷ்டம் ஆச்சோ?
            பாடுபட்ட பட்சக் கோனாரே,
            ஓ! ஸ்திரீ வித்தேசையா,
            காடுகளில் தேடிப் பாருமேன். - ஓ!

4.         மந்தையை க்ருபை கண் பாரும்; சிந்தையில் துயரம் தீரும்,
            சந்ததம் தொழுவம் சேருமேன்,
            ஓ! ஸ்திரீ வித்தேசையா,
            வந்தனம், உமக்குத் தோத்திரமே! - ஓ!

- வே. சாஸ்திரியார்

தந்தானைத் துதிப்போமே


தந்தானைத் துதிப்போமே

286. (284) உசேனி                                                  ரூபகதாளம்

பல்லவி
                    தந்தானைத் துதிப்போமே;-திருச்
                    சபையாரே, கவி-பாடிப்பாடி.

அனுபல்லவி

                        விந்தையாய் நமக்கனந்தனந்தமான,
                        விள்ளற்கரியதோர்[1] நன்மை மிக மிகத் - தந்தானைத்

சரணங்கள்

1.         ஒய்யாரத்துச்[2] சீயோனே,-நீயும்
            மெய்யாகக் களிகூர்ந்து நேர்ந்து,
            ஐயனேசுக்குனின் கையைக் கூப்பித் துதி
            செய்குவையே, மகிழ் கொள்ளுவையே, நாமும் - தந்தானைத்

2.         கண்ணாரக் களித்தாயே,-நன்மைக்
            காட்சியைக் கண்டு ருசித்துப் புசித்து;
            எண்ணுக்கடங்காத எத்தனையோ நன்மை
            இன்னுமுன்மேற் சோனா மாரிபோற் பெய்துமே. - தந்தானைத்

3.         சுத்தாங்கத்து நற்சபையே,-உனை
            முற்றாய்க் கொள்ளவே அலைந்து திரிந்து
            சத்துக் குலைந்துனைச் சத்தியாக்கத் தம்மின்
            ரத்தத்தைச் சிந்தி எடுத்தே உயிர் வரம். - தந்தானைத்

4.         தூரம்திரிந்த சீயோனே-உனைத்
            தூக்கியெடுத்துக் கரத்தினிலேந்தி,
            ஆரங்கள் பூட்டி அலங்கரித்து நினை
            அத்தன் மணவாட்டி யாக்கினது என்னை! - தந்தானைத்
5.         சிங்காரக் கன்னிமாரே,-உம்
            அலங்காரக் கும்மி அடித்துப் படித்து,
            மங்காத உம் மணவாளன் யேசுதனை
            வாழ்த்தி வாழ்த்தி ஏத்திப் பணிந்திடும். - தந்தானைத்

- வே. மாசிலாமணி


[1] உரைக்கமுடியாத
[2] அலங்கார

திருமா மறையே அருள்பதியே


திருச்சபை வளரத் தயைபுரியே

285. ஆனந்தபைரவி                                                ஆதிதாளம்

பல்லவி

                   திருமா மறையே-அருள்பதியே! நின்
                   திருச்சபை வளர நின்தயை புரியே.

சரணங்கள்

1.         கருணை வாசகக் கதிர்பலத் தொளிர,
            கனகார்[1] புவிநின்றே அகல,
            மருள்ஜன மொளிபுற அவனரு ளுணர, - திருமா

2.         யேசு நாமமெங் கணுமொளி வீச,
            இறையே நினை மெய் விசுவாச
            நேச மோடேயுனின் தாசர்கள் பேச. - திருமா

3.         ஞாலம் அந்தமட் டெம்முடனிருக்க,
            நயவாக் களித்தாய் எமக்குருக்கச்,
            சீலமதாயுனின் வசனமதுரைக்க. - திருமா

4.         ஆறிரண்டு பேரான வருடனே
            அமலா இருந்தாய் வெகுதிடனே,
            போரற அருளிய நேயமே போலே. - திருமா

5.         நின்னையன்றிக் கட்டிட எமக்காகா,
            நேயா, தூயா நினை வாகா,
            உன்னி உழைத்திடப் பலமளி யேகா. - திருமா

6.         சத்ய போதம் இத்தரைதனில் செழிக்க,
            தமியோர் நின் புகழே உரைக்க,
            நித்திய பாக்கியமே புவிக் களிக்க. - திருமா

- ஞா. சாமுவேல்


[1] பொன் நிறைந்த

உச்சித மோட்ச பட்டணம் போக


உச்சித மோட்ச பட்டணம் போக

284. (361) சங்கராபரணம்                                          ஆதிதாளம்

பல்லவி

                    உச்சித மோட்ச பட்டணம் போக
                    ஓடி நடப்போமே;-அங்கே
                    உன்னத யேசு மன்னவருண்டு, ஓயா இன்பமுண்டு.

சரணங்கள்

1.         சித்திரச் சீயோன் பெற்றிடச் செல்லும்
            சேனையின் கூட்டமதாய்,-எங்கள்
            ஜீவனினதிபர் யேசு நம்மகிபர்
            சீயோன் பதி மனுவேல். - உச்சித

2.         அன்பினால் அழைப்பார், ஆறுதல் சொல்வார்
            அதிபதி யேசையர்-அங்கே
            இன்பங்களுண்டு; யேசுவின் சமுகம்
            என்றென்றும் ஆறுதலே. - உச்சித

3.         கீதங்களோடு யேசுவைப் போற்றிக்
            கெம்பீரமாய் நடப்போம்;-அங்கே
            கிளர்[1] ஒளியுள்ள பட்டன ராசன்
            கீதங்கள் நாம் அறைவோம். - உச்சித

- சா.ஈ. கிறிஸ்மஸ்


[1] இலங்கும்

உச்சித பட்டணம் பட்சமுடன் செலுவோம்


உச்சித பட்டணம் செல்லுவோம்

283. (344) சங்கராபரணம்                                          ரூபகதாளம்

பல்லவி 
                        உச்சித பட்டணம் பட்சமுடன் செலுவோம்;-
                                    விரைந்தோடி நடவடி, உத்தம புத்திரி,-
                        உச்சித பட்டணம் பட்சமுடன் செலுவோம்.

அனுபல்லவி
                        நிச்சயமாதவே ரட்சகர் செப்புரை
                        நீணிலம் தோன்றும் முனாடி,-நம்
                        நித்திய பிதாவே ஆயத்தமாய் நாட்டிய
                        நீதியின் பட்டணம், ஆதிபன்[1] கட்டடம்,
                        நிண்ணய மா நகரம்-திடத்திடு
                        உன்னதமே சிகரம்;-நமின் பிரிய
                        நேசர் கிறிஸ்து மேல் பாசம் மிகுத் தவர்
                        நேரே செலும் நவ சாலேம் நகர் என்ற. - உச்சி

சரணங்கள்

1.         சித்தமாய் உச்சித பட்டணம் பற்றியே,
            செப்புகிறாய் எனின் தாயே;-அதில்
            சேர்ந்திடு பிள்ளைகள் வாழ்ந்துறும் பாக்கியம்,
            திட்ட அரிதாம், என் தாயே;-புது
            வித்தக மா நகர் ரத்னப் பளிங்கு
            விளக்கொளி மேவும், நன்றாயே;-அந்த
            விஞ்சையர் பட்டணம் எங்கே இருக்கும்?
            விளிம்பி விரி, என் பேராயே;
            இத்தரை மீதிலோ அத்திரி[2] வானிலோ?
            இட்டமாய் யாம் அதற் கெட்டி நடவமோ?
            எங்கே இருக்கு தம்மா?-கவலை அற்
            றங் கிருப்போமே, சும்மா,-சரி சரி,
            இன்பக் கண்ணாட்டியே, அன்புப் புதல்வியே,
            எங்கிருக்கு தென்றன் தங்கமே, சொல்கிறேன். - உச்சி

2.         உன்னத வானிலிருந் திறங்கும் அவ்வெ
            ருசலேம் பட்டணம் கண்டு,-வெகு
            ஊக்கமுடன் அதைப் பார்க்கப் புறப்பட்டு,
            ஓசன்னாவும் பாடிக் கொண்டு,-அங்கே
            பன்னிரு வாசலும் கண்ணாடி வீதியும்
            பானொளிக் கற்களும் உண்டு,-அந்தப்
            பட்டணம் தேவாட்டுக் குட்டியின் ஆசனம்
            பண்பாக மத்தியில் கொண்டு,
            மின்னும் விளக்குகள், தீவட்டிகள் இல்லை;
            விண்ணில் சூரிய சந்திரரும் இல்லை;
            மெய்ப்பொழு தானவரே-அதன் விளக்
            கெப்பொழுதும் அவரே;-அலங்க்ருத
            மேன்மைப்பிரகாசப் பான்மையின் நீதியர்
            மேனி மினுங்கிடத் தோணி இலங்கிடு. - உச்சி

- ஏசடியான் உபாத்தியாயர்


[1] அரசன்
[2] ஆகாயம்

எப்போ காண்பேனோ எப்போ சேர்வேனோ


எப்போது காண்பேனோ?

282. (349) முகாரி                                          ரூபகதாளம்

பல்லவி

                   எப்போ காண்பேனோ? எப்போ சேர்வேனோ?
                   எது என் சீயோனோ? அதின்னம் எத்தனை தொலையோ?

சரணங்கள்

1.         என் யேசுநாதர்,-என் ஆத்தும மீட்பர்,
            என் ரட்சகராகிய யேசுகிறிஸ்து இருக்கிற இடத்தை,- எப்

2.         தூதர்கள் கூடிச்-சோபனம் பாடி,
            நாதன் கிறிஸ்துவைப் போற்றும் பரமநல் வாழ்வை. - எப்

3.         ஜீவ கிரீடம்,-திவ்விய வாழ்வு,
            பாவி எனக்குப் பரிசுத்தவான்களின் பங்குண்டாமே. - எப்

4.         துன்பங்கள் மாறும்,-சுகம் வந்து சேரும்;
            இன்பக் கிறிஸ்துவினிடத்தில் சேர்ந்தால் என் மனம் ஆறும். - எப்

5.         உலகத்தின் கவலை-ஒன்றும் செய்யாதே;
            பலவிதத்தொல்லை இராது, அங்கே பாக்கியம் கொள்வேன். - எப்

6.         கைகளில் எடுத்தேன்-கண்ணீரைத் துடைப்பார்;
            ஐயன் கிறிஸ்துமேல் கவிபாடி நான் ஆனந்தம் கொள்வேன். - எப்

- பாக்கியநாதன் தாவீது

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...